பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியா மேலும் 3 தங்கபதக்கங்களை கைப்பற்றியது.

Update: 2018-10-09 23:00 GMT
ஜகர்தா,

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான உருளை தடி எறிதல் (கிளப் துரோ) போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் 16.02 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அரியானாவை சேர்ந்த ஏக்தா பியான் விபத்தில் சிக்கி முதுகு தண்டு மற்றும் தோள்பட்டையில் பாதிப்பு அடைந்தவர் ஆவார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் மனிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்றார். டெல்லியை சேர்ந்த மனிஷ் நார்வால் வலது கை ஊனம் ஆனவர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தாகுர் நாராயண் 14.02 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 16 வயதான நாகுர் நாராயண் இடது காலில் குறைபாடு உடையவர் ஆவார். குண்டு எறிதலில் இந்திய வீரர் விரேந்தர், உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ராம்பால், வட்டு எறிதலில் இந்திய வீரர் சுரேந்தர் அனீஷ்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இந்திய வீரர்கள் மோனு சாங்காஸ் (குண்டு எறிதல்), ஆனந்தன் குணசேகரன் (200 மீட்டர் ஓட்டம்), சுந்தர்சிங் குர்ஜர் (வட்டு எறிதல்), பிரதீப் (வட்டு எறிதல்) வீராங்கனை ஜெயந்தி பெஹெரா (200 மீட்டர் ஓட்டம்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இந்த போட்டியில் இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தம் 28 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தில் உள்ளது. சீனா 78 தங்கம், 34 வெள்ளி, 29 வெண்கலத்துடன் மொத்தம் 141 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறது.

மேலும் செய்திகள்