தமிழ்நாட்டுப் பெண்... சுவீடன் சாம்பியன்!

தமிழ்நாட்டில் தக்கலை அருகே பிறந்த அஸ்வதி பிள்ளை, தற்போது சுவீடன் பேட்மிண்டன் தேசிய சாம்பியனாகத் திகழ்கிறார், சமீபத்தில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் சுவீடனுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்திருக்கிறார்.

Update: 2018-11-03 09:49 GMT
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடியபோது தனக்குக் கிடைத்த பெரும்பான்மையான கரவொலி இந்திய ரசிகர்களிடம் இருந்து வந்ததாகவும், சுவீடனுக்கு  விளையாடிக்கொண்டிருந்தாலும் தன்னால் தாய்மண்ணை மறக்க முடியாது என்றும் அஸ்வதி கூறுகிறார்.

பெங்களூருவில் தொடக்கம்

‘‘கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த நான், அப்பா வினோத் பிள்ளையின் ஐ.டி. பணி காரணமாக பெங்களூருவில் வளர்ந்தேன், படித்தேன். எங்கப்பா தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடச் செல்கையில் என்னையும் என் சகோதரனையும் உடன் அழைத்துச் செல்வார். அப்பாவுடன் பேட்மிண்டன் விளையாடுவதற்காக, அவர் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடி முடிக்கும் வரை நானும் என் சகோதரனும் காத்திருப்போம். அப்படி சாதாரணமாக விளையாடுவதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்.

கண்டறியப்பட்ட திறமை

இப்படி நான் விளையாட்டாக பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினாலும், எனக்குள் நல்ல திறமை இருப்பதை பலரும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக, பேட்மிண்டன் கோர்ட்டில் எனது பகுதி எல்லைப்புறக் கோட்டில் இருந்து எதிர்ப்புற எல்லைக்கோட்டின் அருகே இறகுபந்தை அடிக்கும் எனது திறனை எல்லோரும் பாராட்டினார்கள். இப்படியாக பேட்மிண்டன் மீது என் ஆர்வம் வளர்ந்தது. எங்கப்பாவும் எனக்கு ஆதரவாக இருக்கத் தொடங்கினார்.

சுவீடனுக்கு இடமாற்றம்

கடந்த 2009-ம் ஆண்டு ஒரு சுவீடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பிசினஸ் மானேஜராக அப்பாவுக்கு வேலை கிடைத்ததால் நாங்கள் சுவீடனுக்கு இடம்பெயர்ந்தோம். அங்கும் நான் பேட்மிண்டன் விளையாடுவதைத் தொடர்ந்தேன். சுவீடனில் இருந்த அற்புதமான விளையாட்டு வசதிகள் எனக்குப் பிடித்திருந்தன. அங்கு நான் விளையாடிய உள்ளூர் பேட்மிண்டன் கிளப், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. எனது திறமையை அறிந்து, சுவீடன் தேசிய அணிக்குத் தேர்வு செய்தார்கள். தொடர்ந்து, சுவீடன் ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவில் அந்நாட்டுக்காக நான் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கத் தொடங்கினேன்.

பயிற்சி... பயிற்சி...

நான் கடந்த பிப்ரவரியில் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சுவீடன் தேசிய சாம்பியன் ஆனேன். ஆனாலும் சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் ஜொலிக்க அதிதீவிரப் பயிற்சி அவசியம். எனவே நான் பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறேன். தினமும் குறைந்தது மூன்றரை மணி நேரம் பயிற்சி செய்வதை கட்டாயமாக வைத் திருக்கிறேன். பயிற்சி விஷயங்களை எனது பேட்மிண்டன் பயிற்சியாளரும், உடற்பயிற்சியாளரும் கவனித்துக்கொள்வார்கள். எந்தெந்தத் தொடர்களில் விளையாடுவது என்று என் அப்பா முடிவு செய்வார். காரணம், நான் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சர்வதேசத் தொடர்களில் ஆடும்போது கட்டாயமாக விடுப்பு எடுக்க வேண்டியிருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கோடைகால விடு முறையையும் பேட்மிண்டன் பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.

பிரகாஷ் படுகோனின் வழிகாட்டல்

தற்போது எனக்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் ரியோ விலான்டோ பயிற்சி அளிக்கிறார். அதேபோல, கோடை விடுமுறையில் இந்தியா வந்து, பிரகாஷ் படுகோனின் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெறு வதையும் நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அது நான் எனது பேட்மிண்டன் திறமையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள உதவுகிறது.

பல்வேறு நாடுகளில்...

ஒரு மாறுதலாக, இந்த ஆண்டு கோடை கால விடுமுறையில் நான் தாய்லாந்து சென்று பயிற்சி பெற்றேன். பொதுவாக, வெவ்வேறு நாடுகளில் பயிற்சி பெறுவதை நான் விரும்புகிறேன். பல்வேறு நாட்டுச் சூழ்நிலைகளில், பல்வேறு பயிற்சியாளர் களிடம் பயிற்சி பெறுவது, நான் பேட்மிண்டனில் வளர உதவும் என்று நம்புகிறேன். ஆசிய நாட்டு பேட்மிண்டன் பயிற்சிக் கலாசாரம் சுவீடன் முறையில் இருந்து வெகுவாக வேறுபட்டது. ஆசியாவில் பயிற்சிக்கு மிக நீண்ட நேரம் ஒதுக்குகிறார்கள். பேட்மிண்டன்தான் வீரர், வீராங்கனைகள் வாழ்வின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. படிப்புக்கு, குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இது கொஞ்சம் கடினமாகத் தோன்றினாலும், இதனால் நன்மைகளும் உண்டு.

கிடைக்கும் பலன்

பல்வேறு நாடுகளுக்குப் பறந்து பறந்து நான் பெறும் பயிற்சி, தற்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உதாரணமாக, சமீபத்தில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன். பதக்கம் வென்றது ஒருபுறம் இருக்கட்டும், அப்போட்டிக்குத் தகுதி பெற்றதையே நான் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். காரணம், நான் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கியபோது, ஒலிம்பிக் போட்டி போன்ற பெரிய போட்டியில் ஆடுவதுதான் எனது இலக்காக இருந்தது. இளையோர் ஒலிம்பிக்கில், கலப்பு அணிகளில் வெவ்வேறு நாட்டு வீராங்கனைகள் ஒன்று சேர்ந்து விளையாடியதும் ஒரு புதுமை. எங்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாது. ஆனாலும் நாங்கள் ஒன்றிணைந்து சிறப்பாக ஆடினோம்.

மறக்க முடியாத ஆதரவு

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ரசிகர் களின் ஒட்டுமொத்த ஆதரவு எனக்குக் கிட்டியதை மறக்க முடியாது. இந்தியாவில் நடைபெறும் இந்திய பேட்மிண்டன் லீக் போட்டியிலும் ஆடுவது எனது பெரிய ஆசை. இந்தியாவுக்காக ஆடாவிட்டாலும், இந்திய பேட்மிண்டனில் என்ன நடக்கிறது என்று நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு சாய்னா நெவாலை மிகவும் பிடிக்கும். இந்திய பேட்மிண்டனை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்தவர் அவர்.

பெற்றோர், உறவினர்

எங்கப்பாவுடன், அம்மா காயத்ரி பிள்ளை மற்றும் உறவினர்களும் எனக்குப் பின்புலமாக உள்ளனர். எங்கள் உறவினர்களில் பலர் பெரிய விளையாட்டு ஆர்வலர்கள் கிடையாது. ஆனால் நான் ஏதாவது ஒரு முக்கியமான போட்டியில் விளையாடுகிறேன் என்றால், உட்கார்ந்து டி.வி.யில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இளையோர் ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் நான் விளையாடிய ஒரு போட்டியைக் கூட விடாமல் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம்தான், நான் மேலும் மேலும் சிறப்பாகச் செயல்பட தூண்டுதலாக உள்ளன.

ஒலிம்பிக்கை நோக்கி...

வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதுதான் எனது ஆகப்பெரும் லட்சியம். அதற்கு நான் நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டும், உலகின் முதல் 70 இடங்களுக்குள் முன்னேற வேண்டும். எனவே நான் அதுகுறித்து ஏற்கனவே திட்டமிட்டு விட்டேன். எந்தெந்தப் போட்டிகளில் விளையாடுவது என்றும் தீர்மானித்து விட்டேன்.

ஞாபகம் வருதே...

சுவீடனில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாகத் திகழ்ந்தாலும், போட்டி, பயிற்சிக்காக உலகமெங்கும் பறந்தாலும், எனது பிறந்த மண்ணை மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. எங்கு சென்றாலும் என் சொந்த ஊர் போல வராது. அதுவே என் இதயத்துக்கு நெருக்கமானது. நான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகம். எனவே எங்கு தென்னை மரங்களைக் கண்டாலும் எனக்கு எங்கள் ஊர் ஞாபகம் வந்துவிடும், சொந்த ஊரில் இருப்பதைப் போலவே உணர்வேன்.’’

தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள், சுவீடன் சார்பில் ஜெயிப்பதில் எங்களுக்கும் பெருமைதான்!

மேலும் செய்திகள்