பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் முதல்முறையாக மாநில அளவிலான பள்ளிகள் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

Update: 2019-01-05 21:00 GMT

சென்னை,

எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் முதல்முறையாக மாநில அளவிலான பள்ளிகள் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளையும் (7–ந் தேதி), நாளை மறுநாளும் (8–ந் தேதி) நடக்கிறது. இதில் 50 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து 15 பள்ளிகள் பங்கேற்கின்றன. சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4x100 மீட்டர் தொடர் ஓட்டம், மெட்லி ரிலே ஆகிய பந்தயங்கள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 ரொக்கப்பரிசாக வழங்கப்படும். தடகள பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜன் போட்டியை தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனைகள் வி.எஸ்.சுரேகா, ஜெயலட்சுமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் அமுதா ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்