ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை

சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார்.

Update: 2019-04-09 22:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். இந்த போட்டியில் அவரிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த பெடரேஷன், ஆசிய தடகளம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அந்த போட்டியில் நடத்தப்பட்ட சோதனையிலும் முதல் போட்டியில் பயன்படுத்திய ஊக்க மருந்தின் தாக்கம் மன்பிரீத் கவுரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி விசாரணை நடத்தியது.

விசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அரியானாவை சேர்ந்த 29 வயதான மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்த காலகட்டத்தில் மன்பிரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியது வரும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்