கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி

கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரத்தில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-22 23:02 GMT
திருச்சி,

தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். அவர் ‘நான்ட்ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் கூறியுள்ளது. இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கோமதியின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். இந்த விவகாரம் குறித்து அவரது அண்ணன் சுப்ரமணியன் கூறியதாவது:-

கோமதி ஊக்கமருந்து பயன்படுத்த வாய்ப்பே இல்லை. இந்த சர்ச்சை தொடர்பாக கோமதி எங்களிடம் பேசினார். அப்போது அவர், தான் எந்த ஊக்கமருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திட்டமிட்ட சதி உள்ளது. கோமதியை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிடாமல் சதி செய்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த ஒரு வீராங்கனையை சாதிக்க விடாமல் தடுக்கின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி மீதும் ஒரு வித குற்றச்சாட்டை சுமத்தினர். எங்களது குடும்பமே மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோமதி தனது ‘பி’ மாதிரியை (ஏற்கனவே அவரிடம் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரியின் மற்றொரு பகுதி) சோதிக்க வேண்டும் என்று முறையீடு செய்துள்ளார். அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் 4 ஆண்டு கால தடையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்