உலக யுனிவர்சியேட் தடகள போட்டி; தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

உலக யுனிவர்சியேட் பட்ட போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Update: 2019-07-10 06:48 GMT
நபோலி,

இத்தாலியின் நபோலி நகரில் உலக யுனிவர்சியேட் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், 100 மீட்டர் தடகள போட்டியில் மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இதில், இந்தியாவை சேர்ந்த தேசிய சாதனை படைத்த தடகள வீராங்கனையான டூட்டி சந்த் கலந்து கொண்டு 4வது வரிசையில் இருந்து தனது ஓட்டத்தினை தொடங்கினார்.

அவர் 11.32 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டி பிடித்து முதலாவது வீராங்கனையாக வந்து தங்க பதக்கம் தட்டி சென்றார்.  அவரை தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்டி (11.33 வினாடிகள்) 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை லிசா கிவா யீ (11.39 வினாடிகள்) 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

ஒடிசாவை சேர்ந்த சந்த் இதற்கு முன் 11.24 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.  கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பந்தயத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக அளவில் நடைபெறும் போட்டி ஒன்றில் தங்க பதக்கம் பெறும் 2வது வீராங்கனை என்ற வரலாறை சந்த் படைத்துள்ளார்.  கடந்த வருடம் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடம் பிடித்து ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.

மேலும் செய்திகள்