டோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் - கவுதம் கம்பீர்

டோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

Update: 2019-07-19 23:40 GMT

* இந்திய தடகள வீராங்கனை 23 வயதான சஞ்ஜிவாணி ஜாதவ், 2017-ம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும், இந்த ஆண்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றவர். இவர் ஊக்கமருந்து விதிமுறையை மீறியதை கண்டுபிடித்த சர்வதேச தடகள சம்மேளனத்தின் வீரர்களின் நடத்தை கமிட்டி அவருக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது. இந்த தடை 2018-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதியில் இருந்து கணக்கிடப்படும்.

* டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறுகையில், ‘இது போன்ற தொடர்கள் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். ஐ.பி.எல். மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கு இது நல்ல அடித்தளமாகும். அது மட்டுமின்றி இந்த போட்டி டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் வீரர்களின் செயல்பாட்டை அனைவரும் கவனிப்பார்கள்’ என்றார்.

* இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் ‘இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்வது முக்கியம். டோனி கேப்டனாக இருந்த போது எதிர்காலம் குறித்து அதிகமாக சிந்தித்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் (2011-12-ம் ஆண்டு) நான், தெண்டுல்கர், ஷேவாக் மூன்று பேரும் ஒரே நேரத்தில் சேர்ந்து ஆட முடியாது, ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியது என்று கூறினார். 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்கள் தேவை என்று விரும்பினார். எனவே நடைமுறைக்கு பயன் அளிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க கூடாது. டோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷன் கிஷான் அல்லது வேறு எந்த விக்கெட் கீப்பரையும் தேர்வு செய்து அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும்.’ என்றார்.

* இந்திய கிரிக்கெட் வீரர் 38 வயதான டோனி எந்த நேரத்திலும் ஓய்வு பெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரிடம் உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று அவரது நீண்ட கால நண்பர் அருண் பாண்டே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்