பாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற - பாஸ்கரன் வலியுறுத்தல்

பாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அர்ஜூனா விருது பெற்ற ‘ஆணழகன்’ பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-31 23:30 GMT
சென்னை,

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெற்ற 19 பேரில் தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் (உடற்கட்டு திறன்) எஸ்.பாஸ்கரனும் ஒருவர். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆணழகன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாஸ்கரனுக்கு இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதும், அதற்குரிய ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் விருது பெற்றுக்கொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய பாஸ்கரனுக்கு விமான சிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாடி பில்டிங் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 25 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன், கடினமாக உழைத்தால் இது போன்ற விருதுகளை பெறலாம். நான் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். மத்திய அரசு 2000-ம் ஆண்டில் எனக்கு வேலை வழங்கி எனது வாழ்க்கையை சிறப்பாக தொடங்கி வைத்தது.

என்னை போன்ற பல வீரர்கள் உருவாகுவதற்கு பாடி பில்டிங் துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில், அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டில் பாடி பில்டிங் துறையையும் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி ‘பிட் இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ளார். நாம் அனைவரும் அதில் இணைந்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

41 வயதான பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தவர். வேலை வாய்ப்புக்காக அவரது குடும்பம் 1980-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்தது. ஏழ்மை காரணமாக அவரால் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தையல் வேலைக்கு சென்ற அவர், அதன் பிறகு பாடி பில்டிங் மீது ஆர்வத்தால் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றி சாதனையாளராக உருவெடுத்தார். தற்போது அவர் ஐ.சி.எப்.-ல் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

மேலும் செய்திகள்