உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் காயத்தால் விலகிய இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளிப்பதக்கம் பெற்றார்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இருந்து காயத்தால் விலகிய இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளிப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரர் ராகுல் அவாரே வெண்கலப்பதக்கம் வென்றார்.

Update: 2019-09-23 00:04 GMT
நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள நுர் சுல்தானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய இளம் வீரர் தீபக் பூனியா, ஒலிம்பிக் சாம்பியனான ஈரான் வீரர் ஹஸ்சன் அலிஜாம் யஸ்டானிசாரட்டியை சந்திக்க இருந்தார்.

இந்த போட்டியின் முதல் சுற்றில் 20 வயதான தீபக் பூனியாவுக்கு இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் தற்போது அதிகரித்ததை தொடர்ந்து இறுதிப்போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

இதனால் நடப்பு ஜுனியர் உலக சாம்பியனான தீபக் பூனியாவுக்கு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல கிடைத்த அரிய வாய்ப்பு பறிபோனது. அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஈரான் வீரர் ஹஸ்சன் அலிஜாம் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இந்த உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா, ரவிகுமார் தாஹியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தனர். தீபக் பூனியா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இவர்கள் 4 பேரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் இந்தியா 3 பதக்கம் (ஒரு வெள்ளி, 2 வெண்கலம்) வென்றதே சிறப்பானதாக இருந்தது.

61 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்திய வீரர் ராகுல் அவாரே, அமெரிக்க வீரர் டைலெர் லீ கிராப்பை எதிர்கொண்டார். இதில் இந்திய வீரர் ராகுல் அவாரே 11-4 என்ற புள்ளி கணக்கில் டைலெர் லீ கிராப்பை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். இது ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறாத எடைப்பிரிவாகும். உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும்.

வெள்ளிப்பதக்கம் வென்ற தீபக் பூனியா அளித்த பேட்டியில், ‘எனது தொடக்க சுற்றில் இடது கணுக்காலில் காயம் அடைந்தேன். எனது காலில் இன்னும் வீக்கம் நீடிக்கிறது. நாட்டுக்காக தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அது முடியாமல் போய் விட்டது. காயம் குணமடைந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த சூழ்நிலையில் போட்டியிடுவது கடினமானதாகும். ஹஸ்சன் அலிஜாமுக்கு எதிராக மோதுவது பெரிய வாய்ப்பு என்பது எனக்கு தெரியும். ஆனால் உடல் தகுதி அதற்கு ஒத்துழைக்கவில்லை. தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் விளையாட முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த போட்டியில் எனது ஒட்டுமொத்த செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்காகும். நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்