போதிய போட்டிகளில் பங்கேற்காதது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தோல்விக்கு காரணம் - சுஷில் குமார் வருத்தம்

‘போதிய போட்டிகளில் பங்கேற்காதது தான் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தான் தோல்வி அடைய காரணம்’ என்று முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் சுஷில் குமார் தெரிவித்தார்.

Update: 2019-09-23 23:37 GMT
நுர் சுல்தான்,

கஜகஸ்தானில் சமீபத்தில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர் சுஷில் குமார் 9-11 என்ற புள்ளி கணக்கில் அஜர்பைஜான் வீரர் காஸ்த்ஹிமுராட் காட்ஷியேவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஒலிம்பிக் போட்டியில் 2008-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்ற சுஷில் குமார் 2010-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து இருந்தார். இதனால் தனது அனுபவத்தின் மூலம் இந்த போட்டியில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 36 வயதான சுஷில் குமார் ஏமாற்றமே அளித்தார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து சமீபத்தில் நடந்த உலக போட்டி வரை சுஷில் குமார் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று இருந்தார்.

உலக மல்யுத்த போட்டியில் கண்ட தோல்வி குறித்து சுஷில் குமார் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக மல்யுத்த போட்டியில் தொடக்க சுற்றில் நான் தோல்வியை சந்தித்தாலும் நன்றாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். கடந்த ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியை விட இந்த போட்டியில் வேகமாக செயல்பட்டேன். தற்போது நான் உடல் வலிமையிலும், தற்காப்பு யுக்தியிலும் லேசான சரிவை சந்தித்து இருக்கிறேன். போதிய அளவுக்கு நான் போட்டிகளில் பங்கேற்காதது தான் தோல்விக்கு காரணம் என்று கருதுகிறேன். இனி வரும் காலங்களில் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்வேன்.

பெரிய போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தடவை அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று பயிற்சியாளர் அறிவுறுத்தினார். உண்மையை சொல்லப்போனால் எல்லா ஆண்டுகளும் என்னால் போட்டியில் பங்கேற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் எனக்கு நெருக்கமானவர்கள் இன்னும் 10 முதல் 20 சதவீத மல்யுத்த வாழ்க்கை மிஞ்சி இருப்பதாக தெரிவித்ததால் நான் ஓய்வு பெறவில்லை.

அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முயற்சிப்பேன்.

வயதுக்கு தகுந்தபடி யுக்தியில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமானதாகும். நான் இன்னும் மல்யுத்தத்தை நேசிப்பதால் தான் களத்தில் நீடிக்கிறேன். 2003-ம் ஆண்டு உலக போட்டியில் நான் மிகவும் நெருக்கத்தில் பதக்கத்தை தவறவிட்டேன். தோல்வியை கண்டு துவண்டு போகமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்