பேட்மிண்டன் தரவரிசையில் லக்‌ஷயா சென் முன்னேற்றம்

பேட்மிண்டன் தரவரிசையில் லக்‌ஷயா சென் முன்னேறி உள்ளார்.

Update: 2019-12-17 23:47 GMT
கோலாலம்பூர்,

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் யூ பே ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். உலக டூர் இறுதி சுற்றில் மகுடம் சூடியதன் மூலம் நம்பர் ஒன் அரியணை அவருக்கு கிடைத்துள்ளது. சீன வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது 2015-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதுவரை முதலிடத்தில் இருந்த சீனதைபேயின் தாய் ஜூ யிங் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்தியாவின் பி.வி.சிந்து மாற்றமின்றி 6-வது இடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் இறங்கி 12-வது இடம் வகிக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான ஜப்பானின் கென்டோ மோமோட்டா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக சாய் பிரனீத் 11-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும் உள்ளனர். வங்காளதேச சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் லக்‌ஷயா சென் 9 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 32-வது இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்