1000 மீ ஸ்கேட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டி சென்ற தென்கொரியா

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஸ்கேட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தென்கொரியா தட்டி சென்றது.

Update: 2020-01-19 05:55 GMT
லாசேன்,

சுவிட்சர்லாந்து நாட்டின் லாசேன் நகரில் 2020ம் ஆண்டிற்கான குளிர்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் மகளிருக்கான ஸ்கேட்டிங் போட்டியின் 1000 மீட்டர் பிரிவில் தென்கொரியாவை சேர்ந்த சியோ வீ-மின் மற்றும் கிம் சான்-சியோ ஆகிய இருவரும், முதல் சுற்றில் இருந்தே முதல் இரண்டு இடங்களில் முன்னிலை வகித்தனர்.

போட்டியின் இறுதி வரை அதனை தக்க வைத்து கொண்டனர்.  இதனால் சியோ வீ தங்க பதக்கமும், கிம் வெள்ளி பதக்கமும் வென்றனர்.  கனடா நாட்டை சேர்ந்த பிளாரென்ஸ் புரூனெல்லே வெண்கல பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற 16 வயது நிறைந்த சியோ வீ வளர்ந்து வரும் வீராங்கனையாவார்.  கடந்த 2019ம் ஆண்டில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,500 மீட்டர் பிரிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களிடம் சியோ பேசும்பொழுது, நான் நினைத்தவற்றை விட கூடுதலாக நடந்துள்ளது.  எனது நாட்டிற்கு தங்கம் வென்று தந்ததற்காக நான் பெருமை அடைகிறேன்.  வருகிற 2022ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்