ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பதக்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பதக்கம் வென்று சாதனை 5-4 கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

Update: 2021-08-06 02:29 GMT
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி 41 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்து இருக்கிறது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஆக்கி போட்டியில் லீக் சுற்றில் இந்திய அணி 4 வெற்றி (நியூசிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜப்பான் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஆஸ்திரேலியாவிடம்) தனது பிரிவில் 2-வது இடம் பிடித்ததுடன் கால்இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 5-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஜெர்மனியை சந்தித்தது.

இரு அணிகளும் தாக்குதல் பாணியை தொடுத்ததால் தொடக்கம் முதலே அனல் பறந்தது. 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் தினோர் ஒருஸ் முதல் கோலை அடித்தார். 17-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் பதில் கோல் திருப்பி சமநிலையை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மனி அணி துடிப்புடன் ஆடி அடுத்தடுத்து 2 கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணியின் நிக்லாஸ் வெல்லன் 24-வது நிமிடத்திலும், பெனடிக் 25-வது நிமிடத்திலும் இந்த கோலை போட்டனர்.

கோல் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்தாலும், இந்திய அணியினர் ஆக்ரோஷத்துடன் போராடி சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். ஹர்திக் சிங் 27-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 29-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினர். இதனால் 3-3 என்ற கணக்கில் சமநிலை உருவானது.

3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்த இந்தியாவின் ருபிந்தர் பால்சிங் 31-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை கோலாக மாற்றினார். 34-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் மீண்டும் கோலடிக்க இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் முன்னிலையை வலுப்படுத்திக் கொண்டது.

அதன் பிறகு ஜெர்மனி அணியினர் பதிலடி கொடுக்க வரிந்து கட்டி மல்லுகட்டினார்கள். 58-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் லூகாஸ் வின்பெடர் கோலடித்து முன்னிலையை குறைத்தார்.

ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர இறுதி கட்டத்தில் அந்த அணி வீரர்கள் எல்லா வகையிலும் முயற்சித்தனர். யுக்தியின் ஒரு பகுதியாக தனது கோல்கீப்பரை வெளியே எடுத்து விட்டு மாற்று வீரரை முன்களத்தில் இறக்கி கூட நெருக்கடி அளித்தனர். கடைசி நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அற்புதமாக செயல்பட்டு முறியடித்து ஒட்டுமொத்த தேசத்தின் ஹீரோவாக மின்னினார்.

கடைசி வரை திரில்லிங்காக நகர்ந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. வெற்றி பெற்றதும் இந்திய அணியினர் துள்ளிக்குதித்து தங்கள் குதூகலத்தை வெளிப்படுத்தினார்கள். 2004-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட ஜெர்மனி அணியினர் பெருத்த சோகத்துடன் விடைபெற்றனர்.

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பதக்கம் கிடைத்து இருக்கிறது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் சென்னையை சேர்ந்த வி.பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதன் பிறகு எந்த ஒலிம்பிக்கிலும் இந்திய ஆக்கி அணிக்கு பதக்கம் கிடைக்கவில்லை.

ஒரு காலத்தில் ஆக்கியில் கோலோச்சியதுடன் 8 முறை தங்கப்பதக்கத்தை அறுவடை செய்திருந்த இந்திய அணியின் நீண்ட கால தடுமாற்றத்தால் ரசிகர்கள் ஏங்கி போய் இருந்தனர். இந்த வெண்கலப்பதக்கத்தின் மூலம் இந்திய அணி, ரசிகர்களின் நெடுங்கால தாகத்தை தணித்து இருப்பதுடன், இழந்த பெருமையையும் மீட்டெடுத்து இருக்கிறது. பதக்கத்தை வென்றதால் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஒலிம்பிக் ஆக்கி வரலாற்றில் இந்தியா பெற்ற 12-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்கியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், தலைமை பயிற்சியாளர் கிரகாம் ரீட் ஆகியோரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பாராட்டினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணி அபாரமான திறமையையும், எதிர்ப்பு திறனையும் வெளிபடுத்தியதுடன், மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி இந்திய ஆக்கியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும். அத்துடன் இந்த விளையாட்டில் இளைஞர்கள் ஈடுபட உத்வேகமாக அமையும்’ என்று கூறியுள்ளார்.

‘இந்த வரலாற்று வெற்றிக்குரிய நாள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும். இந்த சாதனையின் மூலம் நமது அணியினர் ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக இளைஞர்களின் கற்பனையை கைப்பற்றி உள்ளனர். ஆக்கி அணியால் நாடு பெருமிதம் கொள்கிறது’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார.் மத்திய மந்திரிகள் அமித் ஷா, அனுராக் தாக்குர், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்