பாராஒலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் பவினா, நிஷாத்குமார், வினோத் அசத்தல்

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில்3 பதக்கம் கிடைத்தது.

Update: 2021-08-29 19:44 GMT
டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

6-வது நாளான நேற்று இந்தியா பதக்க எண்ணிக்கையை தொடங்கியது. அதுவும் மும்மடங்கு மகிழ்ச்சியாக ஒரே நாளில் 3 பதக்கம் கிட்டியது.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் சி4 பிரிவின் (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பவினா பென் பட்டேல், ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சீனாவின் ஜோவ் யிங்கை நேற்று எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய 2008, 2012-ம் ஆண்டு சாம்பியனுமான ஜோவ் யிங் 11-7, 11-5, 11-6 என்ற நேர் செட்டில் 19 நிமிடங்களில் பவினா பென் பட்டேலை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பாராஒலிம்பிக்கில் அவர் ஒட்டு மொத்தத்தில் ருசித்த 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும். தோல்வியை தழுவிய பவினா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

புதிய சாதனை

ஆனால் பவினாவின் இந்த பதக்கமே புதிய அத்தியாயமாக அமைந்தது. டேபிள் டென்னிசில் இந்தியர் ஒருவர் உச்சிமுகர்ந்த முதல் பதக்கம் இது தான். அத்துடன் பாராஒலிம்பிக் வரலாற்றில் பதக்கத்தை கைப்பற்றிய 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். ஏற்கனவே 2016-ம் ஆண்டு பாராஒலிம்பிக் குண்டுஎறிதலில் தற்போது இந்திய பாராஒலிம்பிக் சங்கத் தலைவராக இருக்கும் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கிறார்.

34 வயதான பவினா பென் பட்டேல் குஜராத் மாநிலம் மேசனா மாவட்டத்தில் உள்ள சுந்தியா கிராமத்தை சேர்ந்தவர். குஜராத்அணிக்காக ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடியவரான நிகுல் பட்டேலை மணந்துள்ளார்.

போலியோவால் ஒரு வயதில் கால்கள் பாதிக்கப்பட்ட பவினாவுக்கு சில ஆண்டுகள் கழித்து ஆபரேஷன் செய்தும் பலன் இல்லை. ஊனமுற்றாலும் மனம் தளராத அவர் 13 ஆண்டுக்கு முன்பு டேபிள் டென்னிஸ் விளையாடுவதில் தீவிரமாக கவனம் செலுத்தினார். வீல் சேரில் அமர்ந்தபடி இடது கையால் பந்தை விரட்டும் பவினா இந்த பாராஒம்பிக்கில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் பெரிச் ரன்கோவிச்சுக்கு கூட அதிர்ச்சி அளித்திருந்தார். ஆனால் தொடக்க லீக்கில் யாரிடம் தோற்றாரோ கடைசியில் இறுதி சுற்றிலும் அவரிடமே (ஜோவ் யிங்) பணிய வேண்டியதாகி விட்டது.

பதற்றத்தால் தோல்வி

வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்ட பிறகு பவினா பட்டேல் கூறுகையில், ‘இந்த பதக்கத்தை எனக்கு ஆதரவாக இருந்த இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி, இந்திய விளையாட்டு ஆணையம், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளோருக்கான திட்டம், பார்வையற்றோர் சங்கம் ஆகியவற்றுக்கும், எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு கடினமாக பயிற்சி அளித்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திய பயிற்சியாளருக்கும் இந்த பதக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.

இறுதிப்போட்டிக்கு முன்பாக ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தேன். இன்னொரு பக்கம் பதற்றமாக இருந்தது. இதனால் தான் களத்தில் என்னால் 100 சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த இயலாமல் போய் விட்டது. இதனால் கொஞ்சம் ஏமாற்றமே. சீன வீராங்கனை ஜோவ் யிங் நன்றாக ஆடினார். பந்தை திருப்பி அடிப்பதில் அதிக வேகம் காட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மிகவும் அனுபவசாலி. அதுவே எனக்குள் பதற்றத்தை கொண்டு வந்து விட்டது. எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. இன்னும் கூடுதல் முயற்சி எடுத்திருந்தால் தங்கப்பதக்கம் வென்றிருக்க முடியும்.பாராஒலிம்பிக் டேபிள் டென்னிசில் ஒரு இந்தியராக புதிய வரலாறு படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

உயரம் தாண்டும் வீரர் நிஷாத்குமார்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி47 பிரிவில் (தோள்பட்டை மற்றும் முழங்கைக்கு கீழ் பாதிப்பு) நேற்று மாலை நடந்த இறுதி சுற்றில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்தக்தை சொந்தமாக்கினார். அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாவி தங்கமகுடம் சூடினார். இன்னொரு அமெரிக்க வீரர் டல்லாஸ் வைசும் 2.06 மீட்டர் உயரம் தாண்டியதால் அவருக்கும் நிஷாத் குமாருடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. மற்றொரு இந்திய வீரர் ராம்பால் 5-வது இடத்துக்கு (1.94 மீட்டர்) தள்ளப்பட்டார்.

21 வயதான நிஷாத் குமார் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர் ஆவார். 3 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு களத்தில் குதித்த அவர் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இமாச்சலபிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள படான் கிராமத்தில் வசிக்கும் நிஷாத் குமாருக்கு 8 வயதில் விபத்தில் சிக்கியதில் வலது கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3-வது பதக்கம்

இந்தியாவுக்கு 3-வது பதக்கத்தை வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் பெற்றுத்தந்தார். அவர் எப்52 பிரிவில் ( தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோர்) 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். போலந்தின் பியோட் கோஸ்விக்ஸ் (20.02 மீட்டர்) தங்கப்பதக்கமும், குரோஷியாவின் வெலிமிர் சன்டோர் வெள்ளிப்பதக்கமும் (19.98 மீட்டர்) கைப்பற்றினர்.

வினோத்குமார் எல்லைபாதுகாப்பு படையில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட போது செங்குத்தான பாறையில் இருந்து கீழே விழுந்ததில் கால்கள் சிதைந்து ஊனமானார். இவரது தந்தை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபட்டவர். 30 வயதை கடந்த பிறகு விளையாட்டை தேர்ந்தெடுத்த வினோத்குமார் தனது 41-வது வயதில் சாதித்து காட்டியிருக்கிறார்.

ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள 3 இந்தியர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘வெள்ளி மங்கை’பவினா பென் பட்டேல், நிஷாத் குமார் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி பாராட்டினார்.

மேலும் செய்திகள்