இலவசங்கள் அல்ல; இலக்குகளை சொன்ன பிரதமர் மோடி

நாடு முழுவதும் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா சீரும் சிறப்புமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.

Update: 2022-08-17 19:54 GMT

நாடு முழுவதும் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா சீரும் சிறப்புமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். இது அவர் அங்கு ஆற்றிய 9-வது உரையாகும். இதுவரையில் பேசியதைவிட, மிக அதிகமான நேரம், அதாவது 82 நிமிடங்கள் பேசினார். வழக்கமாக தன் முன் 'டெலிபிராம்ப்டர்' வைத்து, அதை அவ்வப்போது பார்த்து பேசும் பிரதமர், இந்தமுறை அந்த கருவியின் உதவியின்றி, தானாகவே சரளமாக பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இது 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா என்ற வகையில், அவரது பேச்சை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. அவரது பேச்சில் முன்னேற்ற பாதை தெரிந்தது. அவரது உரையில் இலவசங்கள், மானியங்கள் எதுவும் இடம் பெறவில்லை. இலக்குகளைத்தான் பறைசாற்றினார். சுதந்திரத்துக்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், இவ்வளவு கால பயணம் பல ஏற்ற இறக்கங்கள் மிகுந்தது.

நல்ல நேரங்களிலும், மோசமான தருணங்களிலும் நாட்டு மக்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனரே தவிர, அவற்றை விட்டுவிடவில்லை. உறுதிப்பாடுகள் மங்கிப்போகவும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, நாட்டு மக்கள் 5 இலக்குகள் மீது கவனம் செலுத்தவேண்டும். விடுதலை போராட்ட வீரர்களின் அனைத்து கனவுகளையும் இந்த 5 இலக்குகள் மூலம் 2047-ம் ஆண்டு நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும்போது அடைய வேண்டும் என்றவர், அந்த 5 இலக்குகளையும் பட்டியலிட்டார். முதல் இலக்கு, பெரிய முடிவுடன் நாடு முன்னேறி செல்வதாகும். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்குவதே அந்த பெரிய இலக்காகும். இரண்டாவது இலக்காக நமது எண்ணங்களில், பழக்க வழக்கங்களில், ஒரு சிறிதும் அடிமைத்தனத்தை கொண்டிருக்கக்கூடாது. அதை இப்போதே வெட்டி எறிந்துவிடவேண்டும். நூற்றாண்டுகளாக இருந்துவந்த இந்த அடிமைத்தனம், நமது உணர்வுகளை கட்டிப்போடுவதற்கு வழிவகுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல், திசை திருப்பும் சிந்தனைகளை உருவாக்கிவிடும்.

மூன்றாவது இலக்காக, நமது பாரம்பரியம் மற்றும் மரபுகள் குறித்து நாம் பெருமை கொள்ளவேண்டும். இந்த மரபுதான் கடந்த காலத்தில் இந்தியாவுக்கு பொற்காலத்தை வழங்கியது. 4-வது இலக்கு என்பது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடாகும். 130 கோடி இந்திய மக்களிடையே நல்லிணக்கமும், நல்லெண்ணமும் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒற்றுமை வலுவுடன் இருக்கும். "ஒரே பாரதம்-உன்னத பாரதம்" என்பது கனவுகளை நனவாக்குவதுதான். 5-வது இலக்குதான் மிகமிக முக்கியமானதாகும். அதுதான் ஒட்டு மொத்த மக்களின் கடமையாகும். இதில் பிரதமராக இருந்தாலும், முதல்-அமைச்சராக இருந்தாலும் விதிவிலக்கு இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.

அடுத்த 25 ஆண்டுகளில், அனைவரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவோம் என்பதற்கு இந்த லட்சியம் மிகவும் அவசியமானது. மக்களுக்கு இலவசங்களை அறிவிக்காமல், பிரதமர் முதல் கடைக்கோடி மனிதன்வரை, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வளர்ச்சி மிகுந்த நாடாக ஆக்கிவிட்டோம் என்ற நிலையில், சுதந்திர தின நூற்றாண்டை பெருமையுடன் கொண்டாட இந்த 5 இலக்குகளையும் நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த இலக்கை அடைவது எளிதல்ல. உலக வங்கியின் மதிப்பீட்டில் இப்போது, இந்தியா குறைந்த அளவு நடுத்தர வருவாய் பொருளாதார நாடுதான். எனவே, நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல், தனிநபர் வருவாயும் அதிகரிக்க மத்திய அரசாங்கம் முயற்சிகளை எடுக்கவேண்டும். பிரதமர் கூறியதுபோல, கரையானாக அரித்துக்கொண்டு இருக்கும் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். 2016-ம் ஆண்டு பிரதமர், விவசாயிகளின் வருமானம் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது இரட்டிப்பாக்கப்படும் என்று கூறிய உறுதிமொழியை நிறைவேற்றுவதே மத்திய அரசாங்கத்தின் முதல் கடமையாக இந்த ஆண்டு இருக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்