அரசு பள்ளிக்கூடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்!

தமிழ்நாட்டில் சாதாரண ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்கு செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கில் அரசு பள்ளிக்கூடங்களும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன.

Update: 2022-07-14 20:08 GMT

தமிழ்நாட்டில் சாதாரண ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளிக்கூடத்துக்கு செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கில் அரசு பள்ளிக்கூடங்களும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. இதுதவிர தனியார் பள்ளிக்கூடங்களும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து இயங்குகின்றன. மொத்தம் உள்ள 58,897 பள்ளிக்கூடங்களில் அரசு பள்ளிக்கூடங்களைப் பொறுத்தமட்டில் 24,310 தொடக்கப் பள்ளிக்கூடங்கள், 7,024 நடுநிலைப் பள்ளிக்கூடங்கள், 3,135 உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், 3,110 மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் 45,93,422 பேர் படிக்கிறார்கள். ஆனால், அரசு உதவிபெறும் 8,328 பள்ளிக்கூடங்களில் 22,25,308 மாணவர்களும், 12,382 தனியார் பள்ளிக்கூடங்களில் 64,15,398 மாணவர்களும் படிக்கிறார்கள்.

அரசு பள்ளிக் கூடங்களில் கல்வித்தரம் நன்றாக இல்லை என்று பொதுவான கருத்து இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதி தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இல்லை. தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் போல, அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்லை என்று பெற்றோர்கள் மத்தியில் ஒரு குறை உண்டு. இவ்வளவுக்கும் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்களை விட அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு சம்பளமும் அதிகம், பணி பாதுகாப்பும் உண்டு. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதை உறுதிப்படுத்துவதுபோல, 2020-2021-ம் கல்வியாண்டு வரை, "நீட்" தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 3 அல்லது 5 மாணவர்களுக்கே இடம் கிடைத்தது. அந்த ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிக்கூடங்களில் படித்து "நீட்" தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தவுடன், 437 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. அதுபோல, கடந்த ஆண்டு 544 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. அப்போதே அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது.

இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், அனைத்து தொழில் கல்லூரிகளிலும் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. மேலும், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் உயர்கல்விக்காக அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழில் கல்லூரிகளில் சேர்ந்தால், மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து அதுவும் அமலுக்கு வந்துவிட்டது. இதனால், இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் 9 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருக்கிறார். இவ்வளவு மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இருக்கிறது. தனியார் பள்ளிக்கூட மாணவர்களின் பிறப்பும், வளர்ப்பு சூழலும் வேறு, அதனால்தான் அவர்கள் கல்வியில் ஜொலிக்கிறார்கள் என்று காரணம் சொல்ல முடியாது. பிறக்கும்போது எல்லா குழந்தையும் ஒன்றுதான். தமிழக அரசு தலைமை செயலாளராகவும், மிசோரம் கவர்னராகவும் பணியாற்றிய ஏ.பத்மநாபன் எப்போதும் சொல்வதுண்டு. "பிறக்கும்போது எல்லோருமே தகரமாகத்தான் பிறக்கிறார்கள். சிலரை பட்டை தீட்ட.. தீட்ட.. அவர்கள் பளபளக்கும் உலோகமாகி விடுகிறார்கள். பட்டை தீட்டப்படாதவர்கள் மக்கிப்போன தகரமாகி விடுவார்கள்" என்பார்.

அதுபோல எல்லா குழந்தைகளையும் பட்டை தீட்ட வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. இந்த விழிப்புணர்வை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பள்ளிக்கூட கல்வித்துறைக்கு இருக்கிறது. அரசும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகளை மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இன்றைய அரசு பள்ளிக்கூட மாணவர்கள், நாளைய நட்சத்திரங்களாக சமுதாயத்தில் மிளிர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்