அரசு பள்ளிக்கூடங்களுக்கு படையெடுக்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது.

Update: 2024-04-06 01:08 GMT

ஆண்டாண்டு காலமாகவே வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, நடுத்தரவர்க்க மக்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடங்களிலேயே படிக்க வைத்தார்கள். அரசியல்வாதிகளின் குழந்தைகளும் இதில் விதிவிலக்கல்ல. காரணம் என்னவென்றால், தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி மிகத்தரமாக இருக்கும், பொதுத்தேர்விலும், 'நீட்' தேர்விலும் மற்ற போட்டித்தேர்வுகளிலும் மாணவர்கள் நிறைய மதிப்பெண் பெறுவார்கள் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது.

இந்த நம்பிக்கை ஏழை குடும்பங்களுக்கும் பரவியது. தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தால் நமது குழந்தைகளின் கல்வித்தரம் பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு இணையாக இருக்கும், பெரிய உத்தியோகத்துக்கு போய்விடுவார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக 'டை'க்கட்டி, ஷூ அணிந்து ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் என்ற ஆசையில், ஏழைக்குடும்பங்களில் உள்ளவர்களும் வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி, கடன்வாங்கி தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்க்கத் தொடங்கினார்கள். இவ்வளவுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் ஒரே கல்வித்தகுதிதான் இருக்கிறது. அப்படி இருந்தும் கற்பிக்கும்திறன் தனியார் பள்ளிக்கூடங்களில் அதிகம் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

அரசுப்பள்ளிக்கூடங்களைவிட தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் அதிகம் இருக்கிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வளவையும் மீறி இப்போது அரசுப்பள்ளிக்கூடங்களுக்கு மவுசு அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்காக 'நீட்' தேர்வு எழுதியவர்களில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் இதை அனைத்து தொழிற்கல்வி சார்ந்த கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தினார்.

இதுமட்டுமல்லாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிக்கூடங்களில் படித்து கல்லூரிகளில் சேரும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது 2 லட்சத்து 72 ஆயிரத்து 216 மாணவிகள் இந்த திட்டத்தின் பயனைப்பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கற்பித்தல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் அரசு பள்ளிக்கூடங்களில் கல்வித்தரத்தை மட்டுமல்லாமல், அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம், தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைகள் 'ஸ்மார்ட்' வகுப்பு அறைகளாக மாற்றம் என தனியார் பள்ளிக்கூடங்களைவிட மேலான கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது, 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி என அவர்களின் திறன்களை மேம்படுத்துவது என்று அதிக முனைப்பு காட்டிவருகிறார்கள். இதன் காரணமாக அரசுப்பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது.

நேற்று முன்தினம் வரை மட்டும் 3 லட்சத்து 8 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மாணவர் சேர்க்கைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், இந்த ஆண்டு 4 லட்சத்துக்குமேல் மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக குமரகுருபரன் தெரிவிக்கிறார். அரசும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறது. மாணவர்களும் அலை அலையாய் சேருகிறார்கள். இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான் கல்வித்தரத்தை மேம்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக குக்கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் மடைதிறந்த வெள்ளம்போல பேசவும், கல்வியில் சிறந்துவிளங்கவும், பொதுத்தேர்வு முடிவுகளில் அரசுப்பள்ளிக்கூட மாணவர்கள் முன்னணி இடங்களைப்பெறவும் அவர்களின் பங்களிப்பை நல்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்