இந்தியாவிலேயே முதல்முறை: இருதய அறுவை சிகிச்சையில் சிம்ஸ் மருத்துவமனை சாதனை
எண்டோஸ்கோப்பி முறையிலான நுண்துளை அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சிம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.;
சென்னை,
சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை, இருதயத்தின் இடது கீழறையில் வளர்ந்திருந்த கட்டியை அகற்றுவதற்கு, மார்பெலும்பைப் பிளக்க வேண்டிய அவசியமின்றி, இந்தியாவிலேயே முதல்முறையாக எண்டோஸ்கோப்பி முறையிலான நுண்துளை அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. 45 வயதான பெண் ஒருவரின் இருதயத்தில், இரத்தத்தை உந்தித் தள்ளும் பிரதான அறையின் உட்புறத்தில் வளர்ந்திருந்த மிக அரிதான கட்டியை அகற்ற இந்த நவீன சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பணிபுரியும் பெண்ணான இந்நோயாளிக்கு, வேறு மருத்துவப் பரிசோதனையின்போது இருதயத்தின் இடது கீழறையில் ஒரு திசுத்திரள் இருப்பது எதேச்சையாகக் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இருதய எம்.ஆர்.ஐ பரிசோதனையில், அது 1.6 × 1.5 செ.மீ அளவிலான கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.
நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து இருதய அறுவை சிகிச்சைகளிலும், இருதயத்தில் தோன்றும் முதன்மைக் கட்டிகளுக்கான சிகிச்சைகள் வெறும் 0.6% மட்டுமே. அதிலும் குறிப்பாக, இருதயத்தின் இடது கீழறையில் இதுபோன்று கட்டி உருவாவது மிக மிக அரிது; இது சுமார் 2 முதல் 3 கோடி மக்களில் ஒருவருக்கே ஏற்படக்கூடியதாகும். பொதுவாக இத்தகைய பாதிப்பிற்கு, மார்பெலும்பைப் பிளந்து செய்யப்படும் 'திறந்தநிலை இருதய அறுவை சிகிச்சை' முறையே வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
ஆனால், இதற்கு மாற்றாக சிம்ஸ் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர்கள், உடலில் மிகச்சிறிய துளையிட்டு செய்யும் நவீன 'எண்டோஸ்கோப்பி' (நுண்துளை) அறுவைசிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தனர். இம்முறையில் விலா எலும்புகளுக்கு இடையே சிறு துளையிட்டு, தசைகளின் ஊடாகச் சென்று, இருதயத்தின் அறைகளை அடைந்து அந்தக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் மூலம் நோயாளிக்கு பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
சிம்ஸ் மருத்துவமனையின் இருதய மற்றும் மேம்பட்ட பெருந்தமனி சிகிச்சைப்பிரிவின் இயக்குனரும் முதுநிலை ஆலோசகருமான டாக்டர் வி.வி. பாஷி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இருதய மார்பறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. முகமது இப்ராஹிம் தலைமையிலான குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனைக்காக மருத்துவர்கள் குழுவை பாராட்டி கூறியதாவது: “இந்த வெற்றியானது எமது மருத்துவமனை சூழலின் பலத்தையும், எண்டோஸ்கோப்பிக் செயல்முறையில் எமது திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பின் நவீனத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. அதற்கும் மேலாக எமது மருத்துவர்கள் குழுவின் அர்ப்பணிப்பு உணர்வையும், துல்லியமான திறனையும் இது வெளிப்படுத்துகிறது. ஒருங்கிணைந்து செயல்படும் நாங்கள், சிகிச்சை பராமரிப்பின் மிக உயர்ந்த தரநிலைகளை தொடர்ந்து கடைபிடிக்கிறோம்; மிக அவசியமான, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், குணமாக்கலையும் வழங்குவதில் நாங்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.”
இதுகுறித்து டாக்டர் வி.வி. பாஷி கூறியதாவது: “இருதயத்தின் இடது கீழறையில் கட்டி உருவாவது அரிதான ஒரு பாதிப்பாகும். அதிலும், குறைந்த அளவு ஊடுருவல் கொண்ட நுண்துளை சிகிச்சை மூலம் அதை அகற்றுவது உலக அளவில் மிக மிக அரிதாகும். இந்தியாவில் இச்செயல்முறை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நோயாளிக்கு முழு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, வலது தொடைப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் வழியாக 'இருதய-நுரையீரல் இயந்திரத்தின்' உதவி வழங்கப்பட்டது. அப்பெண்ணின் மார்பில் வெறும் 3 சென்டிமீட்டர் அளவிலான ஒரு சிறிய கீறலிட்டு, அதன் வழியாக வலது மார்புக் கூட்டுப் பகுதி அணுகப்பட்டது. இருதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு, இருதயத்தின் அறைகள் திறக்கப்பட்டன. எண்டோஸ்கோப் கருவியின் உதவியுடன், இருதயத்தின் பிரதான அறை துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு, அந்தக் கட்டி அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டது.
அதன் பிறகு, இருதய அறைகள் மூடப்பட்டு, இருதயம் மீண்டும் இயல்பாகத் துடிக்க அனுமதிக்கப்பட்டது. நோயாளி படிப்படியாக இருதய-நுரையீரல் இயந்திரத்தின் உதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் முழு உடல்நலத்துடன் உள்ளதுடன், இரண்டே வாரங்களில் எவ்விதச் சிரமமுமின்றித் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளார்."
நுண்துளை அறுவைசிகிச்சையின் நன்மைகள் குறித்து டாக்டர் ஏ. முகமது இப்ராஹிம் பேசியதாவது: “பாரம்பரியமான இருதய அறுவை சிகிச்சையில் மார்பின் நடு எலும்பை வெட்ட வேண்டியிருக்கும். இது நோயாளிக்கு வலியையும், தொற்று போன்ற இணை நோய்களுக்கான வாய்ப்பையும் அதிகரிப்பதோடு, மருத்துவமனையில் தங்கும் நாட்களையும் அதிகமாக்கும்.
ஆனால், எண்டோஸ்கோப்பி முறையிலான இருதய அறுவைசிகிச்சை என்பது, குறைவான ஊடுருவல் கொண்ட அணுகுமுறை என்பதால், நோயாளி மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார். வலியும், இரத்த இழப்பும் மிகக் குறைவாக இருப்பதுடன், அறுவைசிகிச்சைக்குப் பிறகு வெளியில் தெரியும் அளவிற்கு மார்பின் நடுவில் தழும்புகள் ஏற்படுவதையும் இது தவிர்க்கிறது. மேலும், எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் பார்ப்பதால் சிகிச்சையின் துல்லியம் அதிகரிக்கிறது.
இதுவரை 5 நோயாளிகளுக்கு இத்தகைய நவீன முறையில் 100% வெற்றியுடன் நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். கரோனரி தமனி நோய், இருதயத்தின் இடைச்சுவர் குறைபாடுகள், இருதய வால்வு சார்ந்த நோய்கள் மற்றும் மீடியாஸ்டினல் எனப்படும் இரு நுரையீரல்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் கட்டிகள் போன்ற பாதிப்புகளுக்கும் இத்தகைய நவீன சிகிச்சை முறையை நாங்கள் பயன்படுத்துகிறோம்.” என்றார்.
"சுமார் 90% இருதயக் கட்டிகள் எவ்விதத் தெளிவான காரணமும் இன்றி இருதய செல்களில் ஏற்படும் எதேச்சையான மாற்றங்களால் நிகழ்கின்றன. மீதமுள்ள 5-10% கட்டிகள் மரபணு ரீதியாக ஏற்படலாம்.