திருநெல்வேலியில் பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை

ராதாபுரம் பகுதியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஆதிதிராவிட பெண்ணை, ஒரு நபர் அசிங்கமாக பேசி கல்லால் தாக்கினார்.;

Update:2025-12-10 15:52 IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கடந்த 2020-ம் ஆண்டு ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பண்ணையார்குளத்தை சேர்ந்த வேலு (வயது 60) என்பவர் வள்ளார்குளம் ஊரைச் சேர்ந்த, ஆதி திராவிட பெண் ஒருவரை அசிங்கமாக பேசி கல்லால் தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வேலு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ஹேமா நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விபரம் பின்வருமாறு:

IPC 324-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், 3(1)(s) SC/ST ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், 3(1)(r) SC/ST ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், TNPHW ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய ஏ.எஸ்.பி. ஹரிகரன் பிரசாத் (தற்போது சென்னை துணை போலீஸ் கமிஷனர்), சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் ராதாபுரம் காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோரைை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்