அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 12ம் தேதி பாமகவினர் ஆர்ப்பாட்டம் - ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தட்டிக் கழிப்பது ஏற்புடையதல்ல என ராதாமஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சமூகநீதியின் பிறப்பிடம், தொட்டில் என்று போற்றப்படுவது தமிழ்நாடு. சமூக நீதி எனது உயிர் மூச்சுக் கொள்கை. இட ஒதுக்கீடு அனைவரின் பிறப்புரிமை. சமூகநீதி ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்வது அரசின் தலையாய கடமை. நலிந்த பிரிவினர் முன்னேறுவதற்கு சமூகநீதி மிக மிக முக்கியம், சமூக நீதிக்காக 1980 முதல் இன்று வரை தொடர்ந்து மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றேன்.
அதனடிப்படையில் சமூகநீதியை உரியவாறு நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிக மிக அடிப்படையானது. அதற்காக நான் பல கட்டங்களில் போராடியும் குரல் கொடுத்தும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. அதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,பீகார், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தட்டிக் கழிப்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததாகும். வன்னியர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறிய மாநிலமாகக் கருத முடியும். வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியின் ஓர் அங்கமாகும். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதோடு கண்டனத்திற்குரியதாகும்.
வருகின்ற 12.12.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியும், அனைத்து சாதி மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும் வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சமூக நீதியை வென்றெடுக்க நடைபெறும் அறப்போராட்டத்திற்கு சென்னையில் நான் தலைமை ஏற்கிறேன். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் முன்பே அறிவித்துள்ளவாறு மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமை ஏற்பார்கள்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களது மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பகுதி, வட்ட, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் போராட்டத்தில் சமூகநீதியை வென்றெடுக்க பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.