கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடி பகுதியில் வாலிபர் ஒருவர், திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததை அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.;
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த சந்தோசம் மகன் வேல்குமார் (வயது 27), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று உடன்குடி தேரியூர் கோவில் அருகில் வைத்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் வேல்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், உடன்குடி தேரியூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் புனிதராஜ்(எ) செல்வம்(23), திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலை வேல்குமார் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.
இதில் புனிதராஜ், அவருடைய அண்ணன் மெக்கானிக் நாகராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேல்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான புனிதராஜ், நாகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.