பரப்பன அக்ரஹார சிறையில் பவித்ரா கவுடாவை பார்ப்பதை தவிர்த்த நடிகர் தர்ஷன்
எந்தவித காரணத்துக்காகவும் நடிகை பவித்ரா கவுடாவை சந்திக்க மாட்டேன் என்று தர்ஷன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.;
பெங்களூரு,
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் தனது ரசிகரான சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் உள்பட நடிகையும், தர்ஷனின் தோழியுமான பவித்ரா கவுடா உள்பட 17 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் துரித கதியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பரப்பனஅக்ரஹார பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பவித்ரா கவுடா, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் தர்ஷனை பார்க்க முயன்றுள்ளார். ஆனால் அதற்கு தர்ஷன் மறுத்துவிட்டார். அவர் சாதுர்யமாக அதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் போலீஸ் அதிகாரிகள் பரப்பனஅக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டு கைதிகளை சந்தித்துள்ளனர். அப்போது அவர்களிடம் நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனை சந்திக்க அவகாசம் தரும்படி கேட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. அலோக்குமாருக்கும் அவர் மனு அளித்திருந்தார். அதுபற்றி நடிகர் தர்ஷனிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணத்துக்காகவும் நடிகை பவித்ரா கவுடாவை சந்திக்க மாட்டேன் என்று நடிகர் தர்ஷன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.