ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கிய மகள்கள்

இந்தி திரைப்படத் துறையில் ‘சமூகப் பாகுபாடு’ தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.;

Update:2026-01-20 21:19 IST

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பாலிவுட் திரை உலகம் குறித்து கூறிய கருத்துக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.ஏ.ஆர்.ரகுமான் “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்," என்று தெரிவித்திருந்தார்.

திரை உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. பாடகர் சங்கர் மகாதேவன், மலையாள இசை அமைப்பாளர் கைலாஸ் மேனன், பாடகி சின்மயி உள்பட திரை உலக பிரபலங்கள் பலர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மகள்கள் கதிஜா மற்றும் ரகீமா இருவரும் தந்தைக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றனர். இசை அமைப்பாளர் கைலாஸ் மேனன் கருத்தை பகிர்ந்து கைதட்டியபடியும், இதய எமோஜிகளையும் ஏ.ஆர்.ரகுமான் மகள்கள் பகிர்ந்துள்ளனர்.

கைலாஸ் மேனன் வெளியிட்டுள்ள பதிவில், “ஏ.ஆர்.ரகுமான் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவருடன் நீங்கள் மாறுபடலாம். ஆனால் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்க முடியாது. உலகமே மதிக்கும் ஒருகலைஞரை அவமானம் என்று அழைப்பதும், அவரது படைப்புகளை கேலி செய்வதும் ஆரோக்கியமான விமர்சனம் அல்ல. இது வெறுப்பு பேச்சு, தமிழ்த கலாச்சாரம் மற்றும் உலக இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒரு சில கருத்துக்களுக்காக குறைத்து மதிப்பிடக்கூடாது, ஒருவரது கருத்தை மவுனமாக்குவதற்காக அவருடைய நேர்மையை தாக்குவது அல்லது அவரை பொதுவெளியில் அவமானப்படுத்துவது முற்றிலும் நியாயமற்றது.” என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா இன்ஸ்டாவில் பேசி இருக்கிறார். அதில் “தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால் அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்க கூடாது. உலக அளவில் மதிக்கப்படும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை அவமானம் என சொல்வது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு " என கதிஜா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்