"நிம்மதியா வாழ விடுங்க"...பிரபல இயக்குனர் மீது உதவி இயக்குனர் பரபரப்பு புகார்
ராஜ்கமல் என்பவர் இயக்குனர் கோபி நயினார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.;
சென்னை,
திரைப்பட இயக்குனர் கோபி நயினார் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக, அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டைச் சேர்ந்த ராஜ்கமல், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோபி நயினார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், '' படிப்பை முடித்த பின் கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் கோபி நயினாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். 3 ஆண்டுகளாகவே அவர் சம்பளம் தரவில்லை. எனக்கும் என்னுடன் பணிபுரிந்த 4 பேருக்கும் இந்த பிரச்சினை இருந்தது.
கேட்டால், திருமணத்திற்கு ஏதாவது பெரிதாக செய்கிறேன், இல்லையென்றால், படத்தில் எதாவது கதாபாத்திரத்தில் நடி, அப்படி என்று எல்லோருக்கும் போலியான ஆசை வார்த்தைகளை கூறினார்.
தொடர்ச்சியாக இதைபோல் ஏமாற்றப்பட்டுகொண்டே வந்தோம். பணம் போனது போகட்டும். அது எனக்கு வேண்டாம். நிம்மதியாக வாழ விடுங்கள் என்று சொன்னால் வாழ விடமாட்டேன் என்கிறார்'' என்றார்.