“பைசன்” படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - இயக்குநர் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் வரும் 17-ந் தேதி வெளியாகிறது.;

Update:2025-10-13 14:40 IST

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், நடிகர்கள் துருவ், பசுபதி, லால், அனுபமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “ ‘பைசன்’ திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை முன்வைத்து உருவான கதை. இப்படியொரு கதையை தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு கூற வேண்டும் என நினைத்தபோது சகோதரர் மணத்தி கணேசனிடம் சென்று, உங்கள் வாழ்க்கையை என் திரைமொழியில், அரசியல் பார்வையோடு சொல்ல விரும்புகிறேன் என. அவர் நீ ஒரு விஷயம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என ஒப்புக்கொண்டார். இப்படித்தான், ‘பைசன்’ உருவானது. நான் இயக்குநராக புகழையும் பணத்தையும் சம்பாதித்துவிட்டேன். அதற்காக, என் மக்களுக்கு என்ன செய்தேன் என்கிற கேள்விக்குப் பதில் பைசன்தான்.

என்னுடைய உச்சபட்ச உணர்வும் கர்வமும் பைசன்தான். பைசன் படத்திற்குள் தென் மாவட்டத்திற்குள் வாழ்க்கையை தொலைத்த நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்திய படம்தான் ‘பைசன்’.‘பைசன்’ படத்தின் வெற்றியை விட இப்படம் இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்