பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
பாலிவுட்டில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா(வயது 61). இவரது வளைந்து ஆடும் நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டவர்.
இந்த நிலையில், நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில் மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோவிந்தாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் கோவிந்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், சோர்வுற்ற நிலையில் காணப்பட்டதாலும் மயங்கி விழுந்ததாக அவரது வழக்கறிஞரும் நண்பருமான லலித் பிந்தால் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தித்து வருகின்றனர்.