‘ஜெயிலர் 2’ கேரளா சென்ற ரஜினிகாந்த்... ஷூட்டிங் எந்த பகுதியில் தெரியுமா?
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை தனது வீட்டில் கொண்டாடிய ரஜினிகாந்த், படப்பிடிப்புக்காக நேற்று கொச்சி சென்றார். ரஜினிகாந்துடன் இயக்குநர் நெல்சனும் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் பெரிய நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2- படத்தில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயிலர் 2 படத்தை அடுத்து,‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் எனத்தெரிகிறது.