நடிகை ஓட்டிசென்ற கார் மோதி பெண் படுகாயம் - அதிர்ச்சி சம்பவம்

ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் சென்று விட்டது.;

Update:2025-10-25 08:22 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பேடராயனபுரா பகுதியை சேர்ந்தவர் கிரண். இவரின் உறவினரான அனுஷாவுக்கு கடந்த 4ம் தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனுஷாவை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கிரண் சென்றுள்ளார். அவர்களுடன் கிரணின் மனைவி அனிதாவும் சென்றுள்ளார். 3 பேரும் ஒரே ஸ்கூட்டரில் சென்றுள்ளனர்.

பேடராயனபுரா எம்.எம்.ரோட்டில் வரும்போது ஸ்கூட்டர் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து கிரண் உள்பட 3 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். குறிப்பாக அனிதாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரின் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப்பின் அனிதா கடந்த 7ம் தேதி குணமடைந்து வீடு திருப்பினார்.

 

இந்த விபத்து தொடர்பாக அனிதா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கிரணின் ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார், சின்னத்திரை நடிகையான திவ்யா சுரேசுக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

கன்னட பிக்பாஸ் போட்டியாளரான அவர், கடந்த 4-ந் தேதி இரவு காரை ஓட்டியதும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நடிகை திவ்யா சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி காரையும் பறிமுதல் செய்தனர்.

ஆனால் திவ்யா சுரேசிடம் விசாரணை நடத்திவிட்டு, அந்த காரை திரும்ப ஒப்படைத்து விட்டதாக போலீசார் மீது அனிதா குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதே நேரத்தில் கால் முறிவு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வரை மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளதாகவும், இந்த மருத்துவ செலவை நடிகை திவ்யா சுரேஷ் தர வேண்டும் என்றும் அனிதா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்