சி.பி.ஐ. விசாரணை, கோர்ட்டு உத்தரவு; தேர்தலுக்கு பின்பு தான் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசா? சிக்கல்கள் என்னென்ன...?

21-ந்தேதி விசாரணையால், குடியரசு தின வார விடுமுறையையொட்டி 23-ந்தேதி படம் ரிலீஸ் செய்யலாமா? என்ற முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.;

Update:2026-01-12 12:38 IST

சென்னை,

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப படக்குழுவும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தது. ரசிகர்களும் ஆவலாக காத்திருந்தனர்.

எனினும், திட்டமிட்டதுபோன்று படம் ரிலீஸ் ஆகாமல், அதில் சிக்கல் ஏற்பட்டது. மத்திய தணிக்கை வாரிய சர்ச்சையில் சிக்கி காலவரையின்றி பட ரிலீசில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

முதலில், ஜனவரி 5-ந்தேதிக்குள் தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைத்து விடும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பணிகள் நடந்தன. ஆனால், தணிக்கை வாரியத்தின் காலதாமதம் மற்றும் தெளிவான பதிலின்மை என பட தயாரிப்பாளர்கள் சட்ட ரீதியாக சென்னை ஐகோர்ட்டை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன்பின்னர் ஜனவரி 7-ந்தேதி தீர்ப்பு வெளிவரும் என தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டு, அது ஜனவரி 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதனால், முதன்முறையாக பட ரிலீஸ் ஆவதில் அதிகாரப்பூர்வ காலதாமதம் ஏற்பட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நார்வே, போலந்து உள்பட 39-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவிலும் 9-ந்தேதி படம் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 9-ந்தேதி ஐகோர்ட்டில் முதலில் தயாரிப்பாளர்களுக்கு சாதகம் தரும் வகையிலான தீர்ப்பு வெளியானது. தணிக்கை சான்றிதழை அளிக்கும்படி மத்திய தணிக்கை வாரியத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக மத்திய தணிக்கை வாரியம் ரிட் மனு தாக்கல் செய்தது, பட ரிலீசில் இன்னும் தாமதம் ஏற்படுவதில் வழிவகை செய்து விட்டது. அடுத்த கட்ட விசாரணை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி போயுள்ளது. இதனால், பொங்கல் ரிலீசில் இருந்து படம் விலகி சென்றது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டை இன்று (12-ந்தேதி) அணுகுவது என கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால், வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ஜனவரி 21-ந்தேதியே விசாரணைக்கான நாளாக இருக்கும். ஆனால், தாமதம் தொடரும் என்றால், அது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். 21-ந்தேதி விசாரணையால், குடியரசு தின வார விடுமுறையையொட்டி 23-ந்தேதி படம் ரிலீஸ் செய்யலாமா? என்ற முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

அதற்கு பின்னரும் பட ரிலீஸ் ஆவதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வராத நிலையிலேயே காணப்படுகிறது. ஏனெனில், இந்த தாமதத்திற்கு இடையே தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவிக்காமல் இருக்க வேண்டும். அந்த இடைப்பட்ட காலத்திலாவது படம் ரிலீஸ் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும்.

அப்படியும் தேதியை முடிவு செய்யாவிட்டால் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டு விடும். ஒருவேளை தேர்தல் தேதியை அதற்கு முன்பே அறிவித்து விட்டால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட உள்ள நிலையில், தமிழக வாக்காளர்களிடம் ஜனநாயகன் தாக்கம் ஏற்படுத்த கூடும் என தேர்தல் ஆணையம் உணர்ந்தால், பட வெளியீட்டை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ அதிகாரம் பெற்று விடும்.

இதனால், காலதாமதம் ஏற்படும்போது அது பட ரிலீசில் பெரிய சிக்கல்களையே உண்டு பண்ண கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால், ஜனவரி 21-ந்தேதி பட ரிலீசுக்கான தீர்வை பட தயாரிப்பாளர்கள் பெற்று விட்டால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம். கரூர் துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை இன்று நடைபெறுகிறது. அதற்காக விஜய் இன்று காலை டெல்லி சென்றுள்ளார். விசாரணை, கோர்ட்டு தீர்ப்பு என பல தடைகளை கடந்து படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்