"நட்சத்திரம் என்பதை கார் தீர்மானிக்குமா"?- துல்கர் சல்மான் பேட்டி
சொகுசு காரில் வந்தால் மட்டுமே பாலிவுட்டில் நட்சத்திரங்களாக அங்கீகரிப்பார்கள் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.;
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீப்த்தில் காந்தா என்ற படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில், நடிகர் துல்கர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "நான் பாலிவுட்டில் நடித்தபோது, நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரங்களாக அங்கீகரித்தார்கள். இல்லையெனில், அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள், மானிட்டரைப் பார்க்க ஒரு இடத்தைக் கூட ஒதுக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
ஆனால், மலையாள திரைத்துறை குறித்து பேசிய துல்கர் சல்மான், எங்கள் துறையில், படங்களுக்கு அதிக செலவு இல்லை. இங்கு யாரும் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறோம். பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்" என்றும் தெரிவித்தார்.
துல்கர் சல்மான் 2018ல் இயக்குனர் ஆகர்ஷ் குரானா இயக்கிய 'கர்வான்' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.