'மங்காத்தா' ரீ ரிலீஸில்.. 'ஏகே 64' படத்தின் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘ஏகே 64’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.;
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதன்முறையாக நடித்திருந்தார். திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியாகும் போதே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவை சந்தித்த அஜித்துக்கு, ‘மங்காத்தா’ படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. ஹீரோவாக மட்டுமல்ல, வில்லனாகவும் அஜித்தை ரசிகர்கள் கொண்டாட வைத்த படம் இதுவாகும்.
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மகத், வைபவ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படத்தை பார்த்தனர்.
படத்தை பார்த்து வெளியே வந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 64’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, ‘ஏகே 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும், பல சர்ப்ரைஸ்களுடன் எண்டர்டெயினிங் திரைப்படமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் அப்டேட்கள் விரைவில் தொடர்ந்து வெளியாகும் என்றும் கூறினார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும், கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.