ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குனரின் பட வாய்ப்பை மறுத்த பகத் பாசில்
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தது ஏன் என நடிகர் பகத் பாசில் விளக்கம் அளித்துள்ளார்.;
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு இயக்கும் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படத்தில் டாம் குரூஸ் முன்னணி கதாபாத்திரத்திலும், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சாண்ட்ரா ஹுல்லர், ரிஸ் அகமது, ராபர்ட் ஜான் பர்க் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பஹத் பாசில் பேட்டியளித்திருக்கிறார். அதில், ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பகத் பாசில், “உண்மையில் சொல்வதானால் ஆடிஷனுக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குனருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு என்பதை புரிந்துகொண்டேன். அதனால் என்னை 3 - 4 மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமின்றி தங்கச் சொன்னார்கள். படத்துக்கான அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. அதனால்தான் நான் அந்த புராஜெக்டைவிட்டுவிட முடிவு செய்தேன்.
ஆடிஷன் இல்லையென்றால், நான் அதற்கு பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு கூட கிடைத்திருக்காது. இருப்பினும், நான் அவருடன் ஒரு வீடியோ அழைப்பில் பேசினேன்.அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் தேடும் நபர் நான் இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். மேலும், அந்தப் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க எனக்குள் இருக்கும் அந்த உந்துதல் எதையும் நான் உணரவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பகத் பாசில், வடிவேலு நடிப்பில் அண்மையில் வெளியாகி வித்தியாசமான கதைக்களத்திற்காக வரவேற்பைப் பெற்ற மாரீசன் திரைப்படம் வருகிற 22ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் பகத் பாசில் - கல்யாணி பிரிய தர்ஷினி நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஓடும் குதிர சாடும் குதிர’ மளையாள படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.