ஏஐ வளர்ச்சி கட்டத்தில் அரசு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது சிறப்பு - நடிகர் கார்த்தி

நான் அமெரிக்காவில் படிக்கும்போது அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் என்று நடிகர் கார்த்தி கூறினார்.;

Update:2026-01-05 21:00 IST

சென்னை,

‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.

நடிகர் கார்த்தி நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, ‘எது எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி’ என்றார். அதன் பிறகு இன்ஜினியரிங் மற்றும் மாஸ்டர்ஸ் படித்தேன். பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு கல்விதான் உதவுகிறது. எது சரி தவறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே பயனளிக்கும்.

நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் பெரிய பொறுப்பில் இருந்தார்கள். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது முக்கியமான விஷயமாக உள்ளது. ஏஐ வளர்ச்சி கட்டத்தில் அரசு ஒரு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம். இதை ஏற்படுத்திக் கொடுத்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் பல தொழில் முனைவோர்கள் இந்தியாவில் இது வளர்ச்சி அடையும் என கூறுகின்றனர்” என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்