பிரசாந்தின் 55வது படத்தை இயக்கும் ஹரி
23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
சென்னை,
கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த், சமீபத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவானது. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. விஜய்யின் கோட் படத்திலும் அவரது நடிப்பும் நடனமும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பிரசாந்தின் 55-வது படமாகும்.இயக்குனர் ஹரியின் முதல் படமான 'தமிழ்' திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.