லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விஷால் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஷால் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.;

Update:2025-10-15 19:35 IST

சென்னை,

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கி கடன் தொகை ரூ.21 கோடியை லைகா நிறுவனம் கொடுத்து கடனை அடைத்தது. இந்த கடன் தொகையை திருப்பி தரும் வரையில், விஷால் தயாரிக்கும் திரைப்படங்களின் உரிமைகளுக்கும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ஆனால், விஷால் தயாரித்த படங்களை நேரடியாக வெளியிட்டது. இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடியே 29 லட்சத்தில், 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க விஷாலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், ‘‘தற்போது நடிகர் விஷால், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்திற்காக பெறப்படும் ஊதிய தொகையை டெபாசிட் செய்ய அவருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு நடிகர் விஷால் பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வருகிற நவம்பர் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்