'டென் ஹவர்ஸ்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-04-19 18:41 IST

சென்னை,

இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியுள்ள படம் 'டென் ஹவர்ஸ்'. ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிபி சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இப்படம் ஒரு நாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஓடும் பஸ்சில் நடக்கும் கொலையை துப்பு துலக்கும் கதை. நெடுஞ்சாலையில் செல்லும் ஒரு பஸ்சில் இளம்பெண் துன்புறுத்தப்படுவதாக கிடைக்கும் புகாரை தொடர்ந்து, போலீசார் அங்கு விரைகிறார்கள். பஸ்சில் சோதனை நடத்தும்போது, அங்கு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.

இந்த வழக்கின் விசாரணையை சிபிராஜ் மேற்கொள்கிறார். பஸ்சில் பயணித்த யாரோ தான் கொலை செய்திருக்க வேண்டும்? என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை தொடங்குகிறார். விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. ஓடும் பஸ்சில் இந்த கொலையை செய்தது யார்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் பரபரப்பான மீதி கதை.

ஆறடி உயரமும், ஆக்ரோஷமான பார்வையுமாக சிபிராஜ், போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார். நெற்றியில் விபூதி பூசி விசாரணைக்கு புறப்படும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். சண்டை காட்சிகளிலும் சீறுகிறார். சப்-இன்ஸ்பெக்டராக வரும் கஜராஜ், சிபிராஜுக்கு தோளோடு தோள் நின்று பலம் சேர்க்கிறார்.

ராஜ் அய்யப்பா, ஜீவா ரவி, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பாய் நகருகிறது. பஸ்சுக்குள்ளேயே பயணிக்கும் உணர்வை தந்துள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசை படத்துக்கு உயிரோட்டம் தருகிறது.

ஒரே இடத்தில் நடைபெறும் விசாரணை பின்னடைவாக இருந்தாலும், பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. கொலைக்கான பின்னணி எதிர்பாராதது. ஓடும் பஸ்சில் கொலையை செய்தது யார்? என்ற மர்ம முடிச்சு கடைசி வரை அவிழாமல், விறுவிறுப்பான திரைக்கதையில் ஆக்ஷன் திரில்லர் படைப்பு கொடுத்திருக்கும் இயக்குனர் இளையராஜா கலியபெருமாளை பாராட்டலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்