'சூர்யா பாடலில் விஜய்..'.. இயக்குனர் விக்ரமன் வெளியிட்ட உருக்கமான பதிவு
`உன்னை நினைத்து' படத்தில் விஜய் நடித்த காட்சிகளை இயக்குனர் விக்ரமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் விக்ரமன், சூர்யா நடிப்பில் வெளியான `உன்னை நினைத்து' படத்தில் முதலில் விஜய் நடித்த காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னை தாலாட்டும்” பாடல், இலங்கையில் உள்ள சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
இந்த பாடலை முதன்முதலில் தளபதி விஜய் அவர்களை வைத்து தான் நான் படமாக்கியிருந்தேன். அந்த இனிய நினைவுகள் மீண்டும் மனதில் எழுந்த தருணத்தில், இந்த பாடலைச் சேர்ந்த ஒரு பழைய வீடியோ காசெட் எனக்கு கிடைத்தது. காலப்போக்கில் அந்த வீடியோ மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தாலும், அதை மீட்டெடுத்து உங்கள் பார்வைக்காக இங்கு பதிவிடுகிறேன்.
இந்த வீடியோவை திரு. சூர்யா நடித்துள்ள தற்போதைய பதிப்புடன் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம். இருவரும் தங்கள் துறையில் தனித்துவமான, சிறந்த கலைஞர்கள். என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.