தமிழ் மொழி மீது இருந்த விருப்பத்தால் தான் பாடலாசிரியர் ஆனேன் - தேவ் சூர்யா
இந்திரா படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா.;
சென்னை,
இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்திரா. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் மெஹ்ரின் பிரசன்டா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்திரா திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா.
இந்த நிலையில், இந்திரா படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான தேவ் சூர்யா, அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘இந்திரா’ திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானேன். முன்னதாக 2018-ம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில், நான் சினிமாவில் அதிகாரபூர்வமாக நுழைந்தது அந்தப் படத்தில் தான் என்றாலும், நான் அங்கம் வகித்து வெளியான முதல் திரைப்படம் ‘இந்திரா’.
எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பத்தால் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி மூலம் தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. இதனால் தான் எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. என் நண்பர்களின் காதலுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு காதல் கவிதைகள் எழுதி கொடுத்திருக்கிறேன். எழுத்து மூலம் பணமின்றி ஒருவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும் என்ற நிலை உருவானது. அதுவே நான் அதிகம் எழுதவும் காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.