"திருமணம் நடந்தால் மகிழ்ச்சி... இல்லை என்றால்.."- நித்யா மேனன்
வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று நிபந்தனையுடன் வாழவில்லை என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.;
சென்னை,
தனுசுடன் திருச்சிற்றம்பலம், இட்லி கடை, ரவி மோகனுடன் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்த தலைவன் தலைவி படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியில், "நான் 3 மாத குழந்தையாக இருந்தபோது பாட்டியின் மடியில் என்னை வைத்துவிட்டு அம்மா வேலைக்கு சென்றார். அம்மாவின் இடத்தை பாட்டியே நிரப்பினார்.
நான் மற்றவர்களை விட வித்தியாசமான பெண். நண்பர்கள் இருந்தாலும் தனியாகவே இருப்பேன். குறிப்பிட்ட வயதில் எனக்கு காதல் அனுபவம் கிடைத்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ அத்தனை முறை என் இதயம் உடைந்து போனது. எனக்கு ஒரு ஆத்ம துணை வேண்டும். அவருடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை. இப்போது எல்லா உணர்வுகளில் இருந்தும் வெளியே வந்து விட்டேன்.
வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று நிபந்தனையுடன் வாழவில்லை. ஆத்ம துணை கிடைத்தால் நாளையே திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ரத்தன் டாட்டாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதுபோல் நானும் தனிமையை மிகவும் ரசிக்கிறேன். திருமணம் நடந்தால் மகிழ்ச்சி... நடக்கவில்லை என்றால் அதைவிட மகிழ்ச்சி...என்றார்.
ஆன்மீக பாதையை தற்போது நான் பின்பற்றுகிறேன். ஆன்மீகம் மூலம் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.