ராஜமவுலியின் “வாரணாசி” படத்தால் இந்தியாவே பெருமைப்படும் - மகேஷ் பாபு
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவிக்கபட்டுள்ளது.;
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு “புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன். இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி.
இந்த படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். வாரணாசி படம் வெளியாகும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும்” என தெரிவித்தார்.