அதை மட்டும் நிரூபித்தால் நான் சினிமாவைவிட்டே விலகுகிறேன் - வனிதா விஜயகுமார் சவால்
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் வந்த எல்லா கண்டெண்ட்டும் தன்னுடைய ஒரிஜினல் கண்டென்ட் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.;
சென்னை,
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து 'தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி' என பல படங்களில் நடித்துள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த 11-ம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வனிதா விஜயகுமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முதலில் என்னுடைய படம் பாருங்கள். அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். சினிமா விமர்சகர்கள் மீது ஏற்கெனவே பலப் பிரச்னைகள் இருக்கிறது. சில விமர்சகர்கள் சரியாக படத்தைப் பார்க்காமல் அரைகுறையாக விமர்சிக்கிறார்கள்.
என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் சினிமாவை விட்டே விலகுகிறேன். நீங்கள் படத்தைப் பார்த்தால்தான் அது புரியும். கணவன் மனைவிக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அழகாக காண்பித்திருக்கிறோம். இதில் இருக்கும் எல்லா கண்டெட்டும் என்னுடையது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தில் 'மைக்கேல் மதன காமராஜ்' படத்தில் வரும் 'சிவராத்திரி..' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று, இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.