கடுக்கா: சினிமா விமர்சனம்
எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய் கவுரிஸ் நடித்துள்ள ‘கடுக்கா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் உற்ற நண்பர்களாக விஜய் கவுரிஸ், ஆதர்ஸ் இருக்கிறார்கள். ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் எதையுமே செய்வது கிடையாது.இதற்கிடையில் விஜய் கவுரிஸ் வீட்டுக்கு எதிரில் ஸ்மேகா குடிவருகிறார். ஸ்மேகாவை பார்த்ததும் விஜய் கவுரிஸ் அவர் மீது காதலில் விழுகிறார். அதேபோல ஆதர்சும், ஸ்மேகாவை காதலிக்க தொடங்குகிறார்.
விஜய் கவுரிசும், ஆதர்சும் அடுத்தடுத்து தங்கள் காதலை ஸ்மேகாவிடம் தெரிவிக்கின்றனர். இருவரின் காதலையும் ஸ்மேகா ஏற்றுக்கொள்கிறார். ஒருகட்டத்தில் இருவருமே ஒரே பெண்ணை காதலிப்பது தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. சண்டை போட்டு நண்பர்கள் பிரிகிறார்கள். இருவரது காதலையும் ஸ்மேகா ஏற்க என்ன காரணம்? இறுதியில் யாருடைய காதல் வெற்றிபெற்றது? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதி கதை.
கொடுத்த வேலை கச்சிதமாக முடித்து, கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார் விஜய் கவுரிஸ். பெண்கள் பின்னால் சுற்றும் பேர்வழியாக அடாவடி நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதேபோல ஆதர்சும் தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். வருங்கால மாமனாருடன் மது அருந்தும் காட்சிகளில் கைதட்டல் கிடைக்கிறது.
கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார், ஸ்மேகா. இரு காதலையும் ஏற்கும் இடங்களில் குழப்பினாலும், பிறகு அதற்கு காரணம் கூறும் இடங்களில் முத்திரை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதர நடிகர்-நடிகைகளும் எதார்த்த நடிப்பை காட்டி ரசிக்க வைக்கிறார்கள்.
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் படத்துடன் பயணிக்க உதவி செய்துள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை. பழைய கால காதலை கண்முன் நிறுத்தியுள்ளதற்கு பாராட்டுகள். ஆனால் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவது தேவையா? பல இடங்களில் கிராமத்து பேச்சு புரியவில்லை. சப்-ஹெட்டிங் போட்டிருக்கலாமே...
பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளை அழுத்தமாக சொல்லி, காதல் என்ற பெயரில் இளைஞர்கள் துரத்தும் சூழலில் பெண்கள் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதை காமெடி களத்தில் சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு. அழுத்தம் நிறைந்த கிளைமேக்ஸ் காட்சிக்கு கைதட்டல் நிச்சயம்.
கடுக்கா - விழிப்புணர்வு.