'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்த காஜல் அகர்வால்
தற்போது காஜல் அகர்வால் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.;
சென்னை,
தெலுங்கு திரைப்படமான சத்யபாமாவில் கடைசியாக நடித்திருந்த காஜல் அகர்வால், தற்போது இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
சேத்தன் டிகே இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயாக நடித்திருப்பவரும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்கு டப்பிங் பேசியவருமான ஷ்ரேயாஸ் தல்படே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பூச்சிக்கொல்லி ஊழலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு சாகர் பி. ஷிண்டே கதை எழுதியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், 'தி இந்தியா ஸ்டோரி' படத்திற்கான படப்பிடிப்பை புனேவில் தொடங்குகிறோம். உங்கள் காலெண்டர்களில் ஆகஸ்ட் 15-ம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். திரையரங்குகளில் சந்திப்போம்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.