''லியோ'' - பொய் வசூலை சொன்னதா படக்குழு?...உண்மை என்ன?
லியோ வசூல் உண்மையில்லை என வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.;
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ''லியோ படத்தின் வசூல் பொய் என சிலர் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். தயாரிப்பாளர் லலித்தின் வருமான வரித்துறை அறிக்கையை வைத்து , லியோ வசூல் உண்மையில்லை என சிலர் பேச, அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ''லியோ'' திரைப்படம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
தற்போது லியோ வசூலில் எந்த உண்மையும் இல்லை என சிலர் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர் லலித்தின் வருமான வரித்துறை அறிக்கைதான் காரணம். தயாரிப்பாளர் லலித்குமார் வருமான வரித்துறையிடம் ''லியோ'' படத்தின் வசூல் ரூ. 404 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார். லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ. 124 கோடிக்கும் , ஆடியோ உரிமம் ரூ 24 கோடிக்கும் , தென்னிந்திய சாட்டிலைட் உரிமம் சுமார் ரூ. 72 கோடிக்கும் , இந்தி உரிமம் ரூ. 24 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மோத்தமாக லியோ படத்தின் மூலம் தனக்கு ரூ. 406 கோடி கிடைத்ததாகவும் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்திருந்தார்.
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், அப்போது லியோ படத்தின் வசூல் ரூ. 600 கோடி இல்லையா?, எல்லாமே பொய்யா? உணமையான வசூல் ரூ. 400 கோடி தானா எனப்பேசி வருகின்றனர். சிலர் இதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்திருகிறார். தயாரிப்பாளர் லலித்குமார் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடைய தனிப்பட்ட வருமானத்தையே குறிப்பிட்டுள்ளதாகவும், படத்தின் வசூல் ரூ. 606 கோடியில் அவருடைய பங்கு ரூ.160 கோடி என்றும் தனஞ்செயன் கூறினார்.
இதனை அடிப்படையாக வைத்து லியோ படத்தின் வசூலை போலியானது என சொல்வதில் அர்த்தமில்லை என தனஞ்செயன் தெரிவித்திருக்கிறார்.