“மைலாஞ்சி” படத்தின் டீசர் வெளியீடு

அஜயன் பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.;

Update:2025-10-11 14:24 IST

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ' மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார்.மேலும் பேசிய அவர், "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்" என்று கூறினார்.

இந்தப் படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.  மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை, டீசரை வெளியிட்டார்கள். சிறப்பு விருந்தினர்களாகப் படக்குழுவினருடன் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்