விஜய்யின் 'ஜனநாயகன்' பட புது போஸ்டர் வெளியீடு
புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.;
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், இப்படத்திலிருந்து "தளபதி கச்சேரி", "ஒரு பேரே வரலாறு" , "செல்ல மகளே" ஆகிய 3 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. இந்த சூழலில் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவில், “நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நண்பா.. நண்பி..” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.