ஆஸ்கர் போட்டியில் பா. ரஞ்சித்தின் “தலித் சுப்பையா” ஆவணப்படம்
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்த ‘தலித் சுப்பையா’ எனும் ஆவணப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியுள்ளது;
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, தங்கலான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு, ரைட்டர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். நீலம் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமைப்புகளை பா.ரஞ்சித் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசை ரீதியான ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கிரிதரன் இயக்கியிருந்தார்.
இதையடுத்து, ‘தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபல்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஆவணப்படம், ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக, நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, 17 ஆவது கேரள சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில், ‘தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபல்ஸ்’ சிறந்த முழு நீள ஆவணப்படம் எனும் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.