நடிகைகளிடம் தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்க வேண்டும்- பிரீத்தி அஸ்ரானி
பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று பிரீத்தி அஸ்ரானி கூறியுள்ளார்.;
சென்னை,
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர், நடிகை பிரீத்தி அஸ்ரானி. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘பிரஷர் குக்கர்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். தமிழில் ‘அயோத்தி’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றிய பிரீத்தி அஸ்ரானி, ‘எலெக்ஷன்’, ‘பல்டி’ ஆகி படங்களில் நடித்தார். சமீபத்தில் கவினுடன் இணைந்து நடித்த‘கிஸ்’ படம் வரவேற்பை பெற்றது.
தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரீத்தி அஸ்ரானியிடம் ஒரு நடிகையின் தோற்றத்தை வைத்து எழுப்பப்பட்ட கேள்வி பரபரப்பாக பேசப்பட்டது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரீத்தி அஸ்ரானி, "ஒருவர் எதையாவது சொல்லிவிட்டு, ‘நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன்’ என்று மழுப்ப நினைக்கிறார்கள். ஆனால் எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு வலிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் அந்த நடிகை (கவுரி கிஷன்) திடமான நிலையில் அந்த கேள்வியை எதிர்கொண்டது நல்ல விஷயம். பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக நடக்கிறதோ, அதைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதுதான் சரியாக இருக்கும். அங்கு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.