இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய பிரியங்கா!- விமர்சனங்களுக்கு பதிலளித்த ரோபோ சங்கரின் மகள்
இறுதி ஊர்வலத்தில் நடனமாடியது அவர்களது அன்பின் வெளிப்பாடுதான் என்று ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா விளக்கமளித்துள்ளார்.;
சென்னை,
கடந்த மாதம் நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது சர்ச்சையை கிளப்பி சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
அதாவது, "எந்த இடத்தில் நகைச்சுவை மற்றும் சிரிப்பு இருக்கிறதோ அங்கு அப்பா நிச்சயம் இருப்பார். அவர்விட்டு சென்ற பொறுப்புகளும், கடமைகளும் எனக்கு நிறைய இருக்கிறது. அவர் விட்டு சென்ற பாதையில் இருந்து நாங்கள் தொடருவோம். மக்களின் ஆதரவுதான் எங்களுக்கு முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்பா சாமிகிட்ட போகும்போது, அம்மா தன்னோட காதலை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்கள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் டான்ஸ் மூலம்தான் வெளிப்படுத்துவோம். அதுதான் அவர்களின் காதல், அதுதான் எங்கள் வாழ்க்கை. அதை தவறாக புரிந்து கொள்வோரின் புரிதல் அவ்வளவுதான்." என்று கூறியுள்ளார்.