'துடரும்': ஷோபனா இல்லை... அவரைதான் முதலில் அணுகினோம், ஆனால்..- காரணத்தை பகிர்ந்த இயக்குனர்
இப்படத்தில் கதாநாயகி தேர்வு குறித்து இயக்குனர் கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.;
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'துடரும்'. தருண் மூர்த்தி இயக்கி இருக்கும் இப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் கதாநாயகி லலிதா கதாபாத்திர தேர்வு குறித்து இயக்குனர் தருண் மூர்த்தி கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி, சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஷோபனாவை முதலில் அணுகவில்லை என்று இயக்குனர் தருண் மூர்த்தி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
"லலிதாவாக நடிக்க எங்கள் மனதில் முதலில் தோன்றியவர் ஷோபனாதான். ஆனால் அவரை எப்படித் தொடர்புகொள்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதனால் அடுத்தாக ஜோதிகாவை முடிவு செய்தோம். கதையைக் கேட்டதும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் எடுக்கவில்லை என்று கூட கேட்டார்.
அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும், படப்பிடிப்பு திட்டமிட்டிருந்த நேரத்தில் அவர் குடும்பத்துடன் உலகச்சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். இதனால் நடிப்பது கடினம் என்று கூறினார். பின்னர் ஷோபனாவை அணுக முடிவு செய்தோம். ஸ்கிரிப்டைக் கேட்ட பிறகு, ஷோபனாவுக்கும் பிடித்திருந்தது. உடனே அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்' என்றார்.